திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொல்ல முயற்சி-கடத்தி வரப்பட்டதா? போலீசார் விசாரணை

திங்கள்சந்தை  : திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பச்சிளம் குழந்தையை கொல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள்நகர் பேருந்து நிலைய பிளாட்பார்மில் ஆதரவற்றவர்கள் தங்கி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பச்சிளம் குழந்தை ஒன்றை யாசகம் பெறும் ஒரு ஆணும், பெண்ணும் அதட்டி கொண்டே இருந்தனர். இதை அங்கு நின்ற இளைஞர்கள் சிலர் கவனித்து கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஆண் போதையில் குழந்தையை தரையில் அடிக்க முயன்றார். இதை கவனித்த இளைஞர்களில் ஒருவர் ஓடிப்போய் குழந்தையை பறித்து காப்பாற்றினார்.

 இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பொதுமக்கள், அந்த குழந்தை குறித்து கேட்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற மற்ற சிலரிடம் கேட்டபோது, இவர்களிடம் குழந்தை இல்லை. இவர்கள் இருவர் மட்டும் தான் இங்கு தங்கியிருந்தனர். இன்றுதான் குழந்தையுடன் வந்துள்ளனர் என கூறினர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அவர்கள் குழந்தையை கடத்தி வந்திருக்கலாம் என இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் பஸ் நிலையம் வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கன்னியாகுமரியில் உள்ள அண்ணனின் குழந்தை என கூறினார். எனினும் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், தோட்டியோடு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்தில் பச்சிளம் குழந்தை மற்றும் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அந்த குழந்தை அவருடைய அண்ணன் குழந்தை தானா? இல்லை எங்கிருந்தாவது கடத்தி வந்து உள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இரவில் மக்கள் கூட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்டிற்குள் பச்சிளம் குழந்தையை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Related Stories: