வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு கொரோனாவுக்கு பெண் சிறுத்தை பலி?

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிறுத்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 15ம் தேதி ரேஞ்சர்கள் உட்பட 315 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒரு ரேஞ்சர் உட்பட 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாட்டு பொங்கல் தினமான கடந்த 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி விஷ்ணு என்ற 5 வயது ஆண் சிங்கம் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பூங்கா மருத்துவமனையில் சிங்கத்தை பிரேத பரிசோதனை செய்தபோது உணவு குழாய் வெடித்து இறந்ததாக கூறினர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் கொரோனாவால் சிங்கம் இறந்ததா அல்லது உணவு குழாய் வெடித்து இறந்ததா என தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தைகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க சிறப்பு கூண்டு அமைக்கப்பட்டு 12 விலங்குகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பூங்காவில் உள்ள ஜெயா என்ற 18 வயது பெண் சிறுத்தை நேற்று காலை உயிரிழந்தது. இதன் உடல் பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், இறந்த ஜெயா என்ற பெண் சிறுத்தைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை வந்த பிறகுதான் சிறுத்தை கொரோனாவால் இறந்ததா அல்லது வேறு காரணமா என தெரியவரும். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: