தமிழக எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரம் எதிரொலி; ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரிப்பு: தனிப்படைகள் அமைத்து சோதனை நடத்தும் போலீசார்

தர்மபுரி: தமிழக எல்லைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், தப்பிச் செல்கின்றனர். தமிழகத்தில் போதை வஸ்துகளான கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது. இதில், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர் சோதனை நடத்தி, அக்குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கள்ளச்சாராய தடுப்பு பணியில் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக ஈடுபடுகின்றனர். கஞ்சா புழக்கத்தை தடுக்க அந்தந்த பகுதியில் போலீசார், சோதனை நடத்தி விற்பனை செய்யும் நபர்களை கைது செய்கின்றனர். இருப்பினும், சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, மதுரை என மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். தனி நெட்வொர்க் அமைத்து, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, ரகசிய விற்பனையை அக்கும்பல் நடத்துகிறது.

திமுக ஆட்சி அமைந்ததும், கஞ்சா விற்பனையை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கஞ்சா புழக்கத்தை கண்காணித்து, அதனை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நாமக்கல் எஸ்பி சரோஜ்தாகூர் அமைத்த தனிப்படை போலீசார், ஆந்திரா சென்று தமிழகத்திற்கு கஞ்சாவை டன் கணக்கில் அனுப்பி வைக்கும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் வாகனங்களில் கஞ்சாவை கடத்தி வந்து சப்ளை செய்து வந்த அக்கும்பலில் தொடர்புள்ள நபர்கள் தற்போதும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு பின், மாநில எல்லைகளில் வாகன சோதனையை தமிழக போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையாக இருக்கும் சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இதில், கஞ்சா கடத்தி வரும் வாகனங்களை மடக்கி பறிமுதல் செய்துள்ளனர். மாநில எல்லை களில் போலீசாரின் சோதனை தீவிரமாகியிருப்பதால், கஞ்சா கடத்தலை ரயில்களின் மூலம் ஒரு கும்பல் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா, ரேணிகுண்டா, கடப்பா, நெல்லூர் வழியே வரும் ரயில்களில் ரகசியமாக பேக்குகளில் வைத்து கஞ்சா கடத்தலில் சிலர் ஈடுபடுகின்றனர். அங்கிருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு கஞ்சாவை கொண்டு வந்து சேர்க்க கூலித்தொழிலாளர்கள் சிலரையும் அக்கும்பல் களம் இறக்கி விட்டுள்ளது. பிரவுன் கலர் பிளாஸ்டிக் கவரில், கஞ்சா வாசனை வெளியே வராதவகையில் இருக்கி கட்டி, பேக்குகளில் அடைத்து கஞ்சாவை கொடுத்து அனுப்புகின்றனர். அதனை ரகசியமாக வேலூர், சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு கடத்திச் செல்கின்றனர். கடந்த 2 மாதமாக ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஆந்திராவில் இருந்து சேலம், கோவை வழியே கேரளா செல்லும் ரயில்களில் அதிகபடியான அளவு கஞ்சா கடத்தப்படுகிறது. இந்த ரயில்களில், தமிழக ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தனிப்படைகள் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களின் பிடியில் சிலர் சிக்குகின்றனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் சேலம் ரயில்ேவ போலீசாரும், பாதுகாப்பு படையினரும் கேரள ரயில்களில் கஞ்சா கடத்தி வந்த 10க்கும் மேற் பட்டோரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 200 கிலோவிற்கும் அதிகமாக கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். போலீஸ் சோதனையை பார்த்ததும், கஞ்சாவை அப்படியே ரயில் கழிவறையில் போட்டுவிட்டு தப்பிச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், ரயில்களில் நடத்தப்படும் சோதனையை இன்னும் அதிதீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து, ரயில்களில் சோதனையை தீவிரப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து வரும் ரயில்களில், காட்பாடி, ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து தனிப்படை போலீசார் ரயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையிடுகின்றனர். இச்சோதனையை அனைத்து நாட்களும் நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து சாலை மார்க்கத்திலும் போலீஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், ரயில்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

இதனையும் தடுக்க போலீசில் தனிப்படைகள் அமைத்து சோதனை நடத்தப்படுகிறது. இக்கடத்தலில் ஈடுபடும் கும்பலை கூண்டோடு கைது செய்ய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆந்திராவில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். அதேபோல், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: