தமிழகத்திலேயே முதன்முறையாக நவீன முறையில் கழிவுகள் அழிப்பு: கருங்குழி பேரூராட்சி அறிமுகம்

மதுராந்தகம்:  கருங்குழி பேரூராட்சியில் நவீன முறையில் செப்டிக் டேங்க் கழிவுகளை அழிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்திலேயே முதன்முதலாக மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் செப்டிக் டேங்க் கழிவுகள் மற்றும் கசடுகள் சுத்திகரிப்பு செய்யும் மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் மேலாண்மை நிலையம் 20 உலர் தொட்டிகள் கொண்டது. தலா பத்து வீதம்  இரு பகுதிகளாக இரும்பு தகடு கூரைகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இங்கு வீடுகளில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்படும் செப்டிக் டேங்க் கசடு  கழிவுநீர் உலர் படுகையில் இறக்கி விடப்படும்.

அப்போது கசடுகள் உலர் தொட்டிகளில் தங்கியும் கழிவுநீர் வடிந்தும் இயற்கை முறையில் 5 நாட்களுக்குள்  சுத்திகரிக்கப்பட்டு விடும். தொட்டியில் தேங்கியிருக்கும் கசடுகள் நன்கு  உலர 20 நாள் வரை அவகாசம் தேவைப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.இதனால் இரும்பு தகடுகள் கூரையை மாற்றம் செய்து சூரிய ஒளி உட்புகும் கூரை ரூபாய் 50 லட்சம் செலவில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரையில் இணைக்கப்பட்டுள்ள 3 கிலோ வாட் சோலார் மின்சார உற்பத்தி தகடுகள் உதவியுடன் இயங்கும் 10 பெரிய மின் விசிறிகள், 60 சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் காற்றின் மூலமாகவும் தேங்கியிருக்கும் கசடுகள் விரைந்து உலர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளும் கருங்குழி பேரூராட்சியில்தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: