மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்கும் அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.12 லட்சம் மதிப்பில் 8 பேருக்கு செயற்கை கால் வழங்கினார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குநர் உமா, துணை ஆணையர்கள் மனிஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இருந்தால் ரூ.5 லட்சம் வரை பயன்பெறலாம். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, ரூ.382.5 கோடி கொரோனா நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருந்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 31,145 பேர் பயன்பெற்றுள்ளனர். தற்போது சென்னையில் 21 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. எல்லா இடங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் உள்ளது. 4 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் 40 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். அதேபோல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறார்கள் 73% பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 23 லட்சம் சிறார்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு முதன்மை மாநிலம் என்கிற நிலையை எட்டியுள்ளது. பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது. அடுத்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இந்நிலையில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரியிலேயே அரசாணை திமுக ஆட்சியில் இருக்கும் போதே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அரசு தாங்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள், உண்மையிலேயே அதிமுகவால் தான் இது தாமதமானது. அதுமட்டுமின்றி அதிமுகவால் தான் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டி கொள்வதில் நியாயம் இல்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: