திருத்தணி அதிமுக பிரமுகர் மகன் தீக்குளித்து சாவு மறியலால் போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி: திருத்தணி அதிமுக பிரமுகர் மகன் தீக்குளித்து இறந்ததால் அக்கட்சியினர் மறியல் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி 18வது வார்டு அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் நந்தன். இவரது மகன் பாபு என்ற குப்புசாமி (36). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். கடந்த 4ம்தேதி, திருத்தணி அருகே திருக்குளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பையை நந்தன் வாங்கிவிட்டு சென்றார். அவர் வீட்டுக்கு சென்று பொருட்களை பிரித்து பார்த்தபோது புளியில் பல்லி செத்து இருந்ததாக கூறி, ரேஷன் கடையில் வந்து கேட்டுள்ளார். அப்போது ரேஷன் கடை ஊழியர், ‘’ நாங்கள் கொடுத்தபோது அப்படி எதுவும் இல்லையே’ என்று கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர் சரவணன் என்பவர், திருத்தணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘’தமிழக அரசு மீது வீண்பழி சுமத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக பிரமுகர் செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில், அதிமுக பிரமுகர் நந்தனை அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். இதை கண்டித்து முன்னாள் எம்பி கோ.அரி  தலைமையில், 50க்கு மேற்பட்ட அதிமுகவினர் நேற்றிரவு சென்னை, சித்தூர்  சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில், தனது தந்தை மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி, நந்தனின் மகன் குப்புசாமி நேற்று மாலை தனது வீட்டில் தீக்குளித்துவிட்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை குப்புசாமி உயிரிழந்தார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்பி கோ.அரி ஆகியோர் தலைமையில், திருத்தணி நகரசெயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர்கள் இஎன்.கண்டிகை ரவி, சக்திவேல், ஆவின் பால்வளத்துறை தலைவர் சந்திரன், பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பொன்னுரங்கம், நகர அதிமுக அவைத் தலைவர் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ், ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் இன்று அரக்கோணம்-மபொசி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

Related Stories: