உபி உட்பட 4 மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பலம் கூடுகிறது; பாஜ.வுக்கு கடும் சவால் பஞ்சாப்பில் தோல்வி உறுதி: கணிப்பில் பரபரப்பு தகவல்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஏபிபி - நியூஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டன. அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் ஆளும் பாஜ 223 முதல் 235 இடங்களையும், சமாஜ்வாடி 145 முதல் 157 இடங்களையும், பகுஜன் சமாஜ் 8 முதல் 16 இடங்களையும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்களையும், மற்றவை 4 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி நேர திருப்பம் ஏற்பட்டு, சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல் ஒரே நாளில் அமைச்சர் உட்பட சில எம்எல்ஏக்கள் பாஜவிலிருந்து விலகி இருப்பது யோகி அரசுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

உத்தரகாண்டில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் பாஜ 31 முதல் 37 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 36 இடங்களையும், ஆம்ஆத்மி 2 முதல் 4 இடங்களையும், மற்றவை ஒரு இடத்தையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. பெரும்பான்மை பலத்தை பாஜ, காங்கிரஸ் இரு கட்சிகளும் நெருங்கியுள்ளதால், பாஜ ஆட்சியை தக்க வைப்பது சந்தேகமாகி உள்ளது. கோவாவிலும் பாஜவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இதனால், கோவாவிலும் பாஜ ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளது.

மணிப்பூரில் மொத்தமுள்ள 60 இடங்களில் ஆளும் பாஜ 23 முதல் 27 இடங்களையும், காங்கிரஸ் 22 முதல் 26 இடங்களையும், என்பிஎப் 2 முதல் 6 இடங்களையும், மற்றவை 5 முதல் 9 ஒன்பது இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதிலும் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது.

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆளும் காங்கிரஸ் 37 முதல் 43 இடங்களையும், ஆம் ஆத்மி 52 முதல் 58 இடங்களையும், அகாலி தளம் 17 முதல் 23 இடங்களையும், பாஜ கூட்டணி 1 முதல் 3 இடங்களையும், பிற கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.  எப்படியும், காங்கிரஸ் ்அல்லது ஆம்ஆத்மியே ஆட்சி அமைக்கும், பாஜவுக்கு படுதோல்வி என கணிக்கப்பட்டுள்ளது.

2 அணியாக பிரிந்த விவசாய சங்கங்கள்: பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜ-அமரீந்தர்சிங் கூட்டணி, அகாலி தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் விவசாய சங்கங்கள் தனித்தனியாக தொடங்கி உள்ள எஸ்எஸ்எம், எஸ்எஸ்பி என 2 கட்சிகள் இம்முறை தேர்தலில் களம் காண்கின்றன. இதனால் பஞ்சாப்பில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் ரத்து விவகாரத்தில் ஒன்றிய அரசை பணிய வைத்த பஞ்சாப் விவசாய சங்கங்கள் 2 அணிகளாக தேர்தலை சந்திக்க உள்ளன. இரு விவசாய கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பதும் முடிவாகவில்லை. விவசாயிகளுக்கு நல்ல ஆதரவு இருப்பதால் இவ்விரு விவசாய சங்க கட்சிகளும் ஓட்டை பிரிப்பது நிச்சயம். இவ்வாறு ஓட்டை பிரிப்பதால் அது ஆம் ஆத்மிக்கே ஆபத்தாக இருக்கும் என்கின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.

உத்தரகாண்ட்டிலும் விரைவில் வெடிக்கும்: உத்தரகாண்ட்டிலும் 12 மூத்த அமைச்சர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்பதால் உத்தரகாண்ட்டிலும் பாஜ கட்சியில் பூகம்பம் வெடிக்கும் வாய்ப்புள்ளது.

Related Stories: