முள்ளங்கி விளைச்சல் அமோகம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 600 ஏக்கரில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். காரிமங்கலம், பாலக்கோடு, தர்மபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய வட்டங்களில் பரவலாக முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்த 40 நாட்களில் இருந்து அறுவடைக்கு வரும். தற்போது, காரிமங்கலம், அனுமந்தபுரம், மோட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

இதனால், சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி, தற்போது ₹8 ஆக குறைந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ₹6 முதல் ₹8க்கு விற்பனையானது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடை செய்யப்படும் விவசாய தோட்டத்திற்கே கொள்முதலுக்காக வரும் மொத்த வியாபாரிகள் கிலோ முள்ளங்கியை ₹1 வீதம் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். விற்பனைக்காக அனுப்பி வைக்கும் கூலி மிச்சம் என்பதால், வேறு வழியின்றி கேட்ட விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளோம்,’ என்றனர்.

Related Stories: