பெருந்துறை ஆலையில் பதுக்கிய 20.85 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் சிக்கினர்

ஈரோடு: பெருந்துறை அருகே ஆலையில் பதுக்கிய 20.85 டன் ரேஷன் அரிசி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் பெருந்துறை அருகே உள்ள தனியார் அரிசி ஆலையில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கு 417 முட்டைகளில், 20,850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில்  ஈடுபட்டதாக சேலம், தர்மபுரியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பதுக்கிய ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: