ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் கட்டாயமாக இடம் மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை: சிஇஓக்களுக்கு உத்தரவு

சேலம்: தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால், கட்டாய மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய பென்சன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து (ஜாக்டோ ஜியோ) பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் மீது கைது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கட்டாய மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் போராட்டம் காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதால், கட்டாய மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கு பல்வேறு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், பள்ளிக்கல்வி ஆணையர் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதன்படி தற்போது, சி.இ.ஓ.,க்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களில் தலைமை ஆசிரியர்கள் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தங்களுக்கான ஐடியில் சப்மிட் செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் மாறுதலுக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் செய்யப்பட்டவுடன், ஒரு நகலை சிஇஓக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அரசு அறிவுறுத்தலின்படி, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு அந்தந்த நாள் கலந்தாய்வு அன்று, காலியாக உள்ள இடங்களில் விருப்ப கலந்தாய்வில் முன்னரிமை அடிப்படையில் பள்ளிக்கு இடமாறுதல் வழங்க வேண்டும். கணவன் அல்லது மனைவியை இழந்த ஆசிரியர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் இல்லை. உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பணிநிரவல் கலந்தாய்வில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். அவருக்கு பதிலாக அதே பள்ளியில் உள்ள அடுத்த இளையவரை பணிநிரவலுக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: