செங்கல்பட்டில் பட்டப்பகலில் பயங்கரம் பிரபல ரவுடிகள் 2 பேர் சரமாரி வெட்டிக்கொலை: நாட்டு வெடிகுண்டு வீச்சால் பரபரப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் பிரபல ரவுடிகள் 2 பேர், வெடிகுண்டுகள் வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (எ) அப்பு (32), பிரபல ரவுடி. இவர் மீது முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் திமுகவை சேர்ந்த ரவிபிரகாஷ் கொலை  உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மாலை கார்த்திக், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு பைக்கில் சென்றார். அங்கு பைக்கை நிறுத்தும் நேரத்தில், மின்னல் வேகத்தில் எதிரே பைக்கில் வந்த 3 பேர், மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து அவர் மீது வீசினர். இதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவர்கள், வீச்சரிவாளை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர்.

இதில், அவர் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதற்கிடையில், நாட்டு வெடி குண்டு வெடித்ததில், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கொலையாளிகள் தப்பும்போது, ‘‘இனி இந்த ஊருக்கு நாங்கள்தான் டான்’’ என கூறியபடி, சென்றனர். பின்னர் மர்ம நபர்கள், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள பிரபல ரவுடி மகேஷ் (22) வீட்டுக்கு சென்றனர். அங்கு, அவர் தனி அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். அடுத்தடுத்து பிரபல ரவுடிகள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு ஏஎஸ்பி ஆசிஸ் பச்சோரோ, டவுன் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், வெடிக்காமல் சாலையில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

தொடர்ந்து எஸ்பி அரவிந்தன், சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் ஓடி சென்று நின்றது. செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பிஸ்கெட் (எ) மொய்தீன், தீன் (எ) தினேஷ், மாது (எ) மாதவன் ஆகியோருக்கும், கொலை செய்யப்பட்ட கார்த்திக், மகேஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவர்கள், கொலை செய்தார்களா அல்லது தொழில்போட்டியா, கள்ளக்காதல் விவகாரமா, கட்டப்பஞ்சாயத்தில் மோதலா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

* காவல்நிலையம் எதிரே...

செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ரவுடி கார்த்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல் நிலையத்தின் முகப்பில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. அதிகளவில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், மசூதி, காவல் நிலையம், வணிக வளாகங்கள் உள்ள இடத்தில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

* தொடர்ந்து 2 கொலைகள்

செங்கல்பட்டு பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் நகர மன்ற துணை தலைவரும், அதிமுக நகர செயலாளருமான குரங்கு குமார், அவரது டிரைவர் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மறைமலைநகரில் 2020ம் ஆண்டு அதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான திருமாறனை, ஒரு சிறுவன் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தான். அதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

Related Stories: