ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு ஊராட்சியில் ஜல்லி கற்கள் நிரப்பி 2 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத தார்சாலை-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு ஊராட்சியில் ஜல்லி கற்கள் நிரப்பி 2 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, கொங்கு நாடு என மூன்று ஊராட்சிகள் உள்ளது. இந்த மூன்று ஊராட்சிகளிலும் 38க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு ஒவ்வொரு கிராம பகுதிக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்காக போக்குவரத்து வசதிக்கு சிமென்ட் சாலை, தார்சாலை போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லிவாசல் நாடு ஊராட்சிக்குட்பட்ட சேம்பாரை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும், 3 ஊராட்சிக்குட்பட்ட கிராம மலைவாழ் மக்களும் வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு கோயிலுக்கு செல்லும் பாதையை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைத்தனர். அதன் பிறகு தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 கிமீ தொலைவிற்கு தார்சாலை அமைக்க ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டது. ஆனால், தார்சாலை அமைக்கப்படவில்லை.

மேலும், கடந்த பருவ மழையால், சாலை முழுவதும் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் கோயிலுக்கு செல்லும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், காரில் வரும் பக்தர்கள் அச்சாலையில் செல்ல முடியாததால், காரை அப்பகுதியில் நிறுத்திவிட்டு 2 கிமீ நடந்து சென்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, குண்டும் குழியுமான சாலையில் தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: