கிராமமக்கள் சாலைமறியல் எதிரொலி சிலுக்குவார்பட்டி கண்மாய்க்கு நீர்திறப்பு

பட்டிவீரன்பட்டி :  நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியில் மன்னவராதி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பாசனத்தை நம்பி சிலுக்குவார்பட்டி, மன்னவராதி, சீரங்கம்பட்டி உள்ளிட்ட 8 கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக மன்னவராதி கண்மாய் நிரம்பவில்லை.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இவ்வாறு போதிய மழை பெய்தும் கண்மாய்க்கு தண்ணீர் வராததை கண்டித்து கடந்த ஜன.1ம் தேதி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி 8 கிராம மக்கள் சிலுக்குவார்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் நிலக்கோட்டை டி.எஸ்.பி சுகுமார், நிலக்கோட்டை தாசில்தார் தனுஸ்கோடி ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்தி, கண்மாய்க்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கடேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள செங்கட்டான்பட்டி பிரிவு வாய்க்காலிலிருந்து சிலுக்குவார்பட்டி கண்மாய்க்கு தண்ணீரை திறந்துவிட்டனர். தற்போது சிலுக்குவார்பட்டி கண்மாய்க்கு வாய்க்காலில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Related Stories: