‘பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர்’ மேகாலயா ஆளுநர் சொல்வது உண்மையா? தேசிய அரசியலில் பரபரப்பு; கேள்வி எழுப்புகிறது காங்கிரஸ்

புதுடெல்லி: ‘பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர். மோடிக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக அமித்ஷா சொல்கிறார்’ என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் பேசியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதெல்லாம் உண்மைதானா என பிரதமர் பதிலளிக்க வேண்டுமென காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. மேகாலயா மாநில ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர், அரியானாவின் சர்கி தாத்ரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘நான் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவரிடம் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசினேன். அடுத்த 5 நிமிடத்தில் பிரதமர் மோடி என்னுடன் வார்த்தையால் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

விவசாயிகள் போராட்டத்தில் சுமார் 500 விவசாயிகள் இறந்து விட்டனர் என்று நான் கூறியதற்கு, ‘அவர்கள் சாவுக்கு நானா காரணம்?’ என கேட்டார். மேலும், ‘அமித்ஷாவிடம் போய் கேளுங்கள்’ என திமிராக பதிலளித்தார். நானும் அமித்ஷாவை சென்று சந்தித்தேன். அப்போது பேசிய அமித்ஷா, ‘பிரதமர் மோடியை சிலர் பைத்தியமாக்கி விட்டார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாவது ஒருநாள் அவர் சுய நினைவுக்கு வருவார்’ என்றார். இதையெல்லாம் நான் பொது வெளியில் சொல்வதால் என்னை வேறு மாநிலத்திற்கு மாற்றுவார்கள். அதைப் பற்றி கவலை இல்லை. நான் எப்போதும் விவசாயிகள் பக்கம் இருப்பேன்’’ என கூறி உள்ளார்.

ஆளுநர் மாலிக் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த விவகாரம் தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மோடியை சராமரியாக விமர்சித்து வருகின்றனர். சத்யபால் மாலிக் பேசிய வீடியோவைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘மேகலாயாவின் ஆளுநர் பிரதமரை ‘திமிர்பிடித்தவர்’ என்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமரை ‘பைத்தியம்’ என்கிறார். அரசியலமைப்பு அதிகாரிகள் ஒருவரையொருவர் இவ்வளவு அவமதிப்புடன் பேசுகிறார்கள். இதெல்லாம் உண்மையா மோடி ஜி?’’ என கேட்டுள்ளார்.

* முதல் முறை அல்ல

மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் பாஜ அரசுக்கு எதிராகப் பேசுவது இது முதன்முறை அல்ல. அவர் பல முறை விமர்சித்திருக்கிறார். 2018ம் ஆண்டு காஷ்மீர் சட்டப்பேரவையை ஒன்றிய அரசு குதிரை பேரம் நடத்தி கலைத்ததாக கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை விமர்சித்தார். இதனால் கோவாவுக்கு ஆளுநராக மாற்றப்பட்டார். கோவாவில் பாஜ முதல்வர் பிரமோத் சாவந்த்தை விமர்சித்ததால், மேகலாயா ஆளுநராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அந்தர் பல்டி

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஆளுநர் சத்யபால் மாலிக் அனைத்து குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை நான் சந்தித்த போது அவர் எனது கருத்துக்கு உடன்படவில்லை. நான் சொல்வதை கேட்க தயாராக இல்லை. அதனால் அமித்ஷாவை சந்திக்கச் சொன்னார். அமித்ஷா, பிரதமர் மோடிக்கு மிகுந்த மரியாதை அளித்தார். சிலர் பிரதமரை தவறாக வழிநடத்துவதாக அமித்ஷா கூறினார். மேலும், ஒருநாள் அதை பிரதமர் புரிந்து கொள்வார் என்றும் கூறினார். மற்றபடி பிரதமர் மோடியை பற்றி அவதூறாக அமித்ஷா எதையும் பேசவில்லை’’ என கூறி உள்ளார்.

Related Stories: