ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருத்தணி: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். திருத்தணி மபொசி சாலையில் உள்ள சுந்தரவிநாயகர் கோயிலில் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி முருகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பச்ச மரகத கல் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.இதுபோல், திருத்தணி கோட்ட ஆறுமுசாமி கோயில், விஜயராகவபெருமாள், விஜயலட்சுமி தாயார் கோயில்,வீராட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திருவாலங்காட்டில் உள்ள வராண்டேஸ்வரர் கோயில், குன்னத்தூரில் உள்ள  ஜடா முனிஸ்வரர் கோயில், திருக்கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

ராமாபுரம் கிராமத்தில் உள்ள தசரூப லட்சுமிநரசிம்ம சாமி கோயில், நல்லாட்டூர் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதுபோல் திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவ பெருமாளை பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஜெயா நகரில் உள்ள  மஹாவல்லப கணபதி ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெற்றது. தீர்த்தீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சத்தியமூர்த்தி தெருவில் உள்ள  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். காக்களூர், பூங்கா நகரில் உள்ள சிவாவிஷ்ணு ஆலயம், ஜல நாராயண பெருமாள், புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், காக்களூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், பூங்காநகரில் உள்ள யோக ஞானதட்சிணாமூர்த்தி, ஞான மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

இதுபோல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி நடந்தது. பொது மக்கள், இளைஞர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள், கச்சபேஸ்வரர்,  ஏகாம்பரநாதர், உலகளந்த பெருமாள், வைகுண்டபெருமாள் ஆகிய கோயில்களில்  நேற்றிரவு முதலே சிறப்பு பூஜை நடந்தது.  இதுபோல் பெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை முருகன், ஆதிகேசவ பெருமாள்,  உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள், வைகுண்ட வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடியில் உள்ள குரு கோயில்  உள்ளிட்ட  102 கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள கிறிஸ்துநாதர் ஆலயம், சிஎஸ்ஐ ஆலயம், உத்திரமேரூர் மல்லிகாபுரத்தில் உள்ள மாதா கோயில் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏரி காத்த ராமர் கோயில், திருப்போரூர் முருகன் கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு ஏகாம்பரநாதர் கோயில், வேதாந்த தேசிகர் சீனிவாச பெருமாள் கோயில், கலெக்டர் அலுவலக விநாயகர் கோயில், பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோயில், வடநெம்மேலி நித்யகல்யாண பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  மேலும் அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா கோயில், தச்சூர் மாதா கோயில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய மாதா கோயில், பிராங்க்ளின் புனித சூசையப்பர் ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை முடிந்து, அதிகாலை வீடு திரும்பும்போது அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருவேற்காடு மற்றும் மாங்காட்டில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் இன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.

Related Stories: