தமிழக ஆளுநருடன் அதிமுகவினர் திடீர் சந்திப்பு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம் மற்றும் மனோஜ் பாண்டியன், வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் நேற்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆளுநரை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடந்த சம்பவம் குறித்து விரிவாக பேசினோம். மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எங்களை பற்றி தவறாக பேசியதற்காக அவர் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டது. எந்த வழக்கிலும், எப்போதும் அதிமுக அரசு 10 ஆண்டு காலத்தில் யாரையும் கைது செய்யவில்லை. குறைகளை சுட்டிக்காட்டினால் வழக்குகள் போடப்படுகிறது.

வழக்குகளை கண்டு நாங்கள் அஞ்சப்போவது இல்லை. வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஐகோர்ட்டுக்கு சென்றார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். அவர் மீது போடப்பட்ட வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்க அவருக்கு அனைத்து உரிமையும் உண்டு. 3ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது. அவருக்கு ஜாமீன் கிடைத்தால் வெளியே வரப்போகிறார். இல்லையென்றால் நீங்கள் கைது செய்யப்போகிறீர்கள். இதில் என்ன அவசரம்? இது பற்றியெல்லாம் ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: