சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவருக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்: பணத்தை அமுக்கியதாக குற்றச்சாட்டு

ஆத்தூர்: சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவருக்கு எதிராக அக்கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவிலேயே முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற ேதர்தல் கடந்த மாதம் 19ம்தேதி நடந்து முடிந்தது. இந்த ேதர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஜ தலைவர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாகவும் செயல்பட்டனர். இவர்களுக்கு தேர்தல் செலவினம் என்ற பெயரில் கட்சி தலைமை ஒரு பெரும் தொகையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்று கொண்ட மாவட்ட தலைவர்கள், அதை செலவிடாமலும், தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பிரித்து ெகாடுக்காமல் அமுக்கி கொண்டதாகவும் மாநிலம் முழுவதும் புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் மீது புகார் தெரிவித்து பாஜவினர் பரபரப்பு போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர்.

அந்தவகையில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முகநாதன் குறித்து ஆத்தூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், ‘‘பணத்தை கொள்ளையடித்த மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியில் இருந்து நீக்கு. பாஜ கூட்டணியின் வெற்றிக்கு உழைக்காமல் எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து, நமது கட்சி நிர்வாகிகளை மாற்று கட்சிக்கு ஓட வைத்த சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியை விட்டு நீக்கு’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள ஆத்தூர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இங்கு பாஜ கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக தேவதாஸ் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சண்முகநாதனிடம் கேட்டபோது, ‘‘எங்கள் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட நபரிடம் வரவு, செலவுகளை ஒப்படைப்பது கிடையாது. கட்சி மேலிடம் அமைத்துள்ள மையக்குழு மூலமே செலவினங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் எனக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு விஷமிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது குறித்து ஆத்தூர் போலீசாரிடம் புகார் ெதரிவித்துள்ளேன்’’ என்றார்.

The post சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவருக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்: பணத்தை அமுக்கியதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: