நாகலாந்தில் மேலும் 6 மாதம் ஆயுதப்படை சட்டம் நீட்டிப்பு

புதுடெல்லி: நாகலாந்து மாநிலத்தில்  தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி நாகா கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீட்டித்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் கடந்த 1963ம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருந்து வருகிறது. மோன் மாவட்டத்தில் கடந்த 4ம் துணை ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறும்படி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதனால், இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக ஆராய, ஒன்றிய அரசு சமீபத்தில் உயர்நிலை குழு அமைத்தது.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958ம் ஆண்டின் (எண் 28) பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, நாகலாந்து மாநிலம் 6 மாத காலத்துக்கு பதற்றம்மிக்க பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், டிசம்பர் 30ம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு நாகா மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: