மோசடி வழக்கில் தேடப்படும் ராஜேந்திரபாலாஜி தர்மபுரி விடுதியில் தங்கிச்சென்றாரா? வைரலாகும் தகவல்களால் பரபரப்பு

தர்மபுரி: ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உட்பட 4பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பக்கத்து மாநிலங்களில் இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதேபோல் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமான மாஜி அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான ஓசூர், கிருஷ்ணகிரி, அதன் பக்கத்து மாவட்டங்களான தர்மபுரி, திருப்பத்தூரில் ராஜேந்திரபாலாஜி பதுங்கியிருப்பதாக தகவல்கள் பரவியது. இதன் எதிரொலியாக திருப்பத்தூரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ச்சியாக அந்த மாவட்டத்தை சேர்ந்த ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி நேற்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சேலூர் அம்மாபாளையம் மலைகிராமத்தில் பதுங்கி இருப்பதாகவும், நள்ளிரவில் போலீசார் அவரை நெருங்கிவிட்டதாகவும் தகவல் பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரிக்கு வந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.

திருப்பத்தூரில் இருந்த அவரை மாஜி அமைச்சர் ஒருவரின் டிரைவர் காரில் அழைத்து வந்ததாகவும், அந்த டிரைவர் மற்றும் மாஜி அமைச்சரின் உதவியாளரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. மேலும் தர்மபுரியில் அவர் தங்கியிருந்ததாக கருதப்படும் விடுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் பரபரப்பு எழுந்துள்ளது. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் விருதுநகர் தனிப்படை போலீசாரால் மேற்கொள்ளப்படுகிறது. சில விவரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அதேநேரத்தில் வெகுவிரைவில் தனிப்படையினர் அவரை கைது செய்யவும் வாய்ப்புகள் உள்ளது’’ என்றனர்.

Related Stories: