குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் தொய்வு

குன்னூர்:  குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 17 இடங்களில் சாலை விரிவாக்க பணி தேசிய நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது. இதே போன்று 100க்கும் மேற்பட்ட கழிவு நீர் செல்ல பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த 9  மாத காலமாக முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் குன்னூர் காட்டேரி பார்க் பகுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சாலை விரிவாக்க பணி நடைபெறும் போது சாலையில் சுமார் 7 மீட்டர் வரை சாலையில் பிளவு ஏற்பட்டது.

இதனால் கனரக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மட்டும்  கோத்தகிரி வழியாக  மாற்றப்பட்டுள்ளது. அதன்படி குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக மாற்றம் செய்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வர கனரக வாகனங்கள் இந்த சாலையில் அனுமதிக்கப்படுகிறது.பிளவு ஏற்பட்ட பகுதியில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு பாதிப்பு ஏற்பட்ட இடத்தினை நேரில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது குறைவான ஆட்கள் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  இதனால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக சுற்றி வருவதால் கடும் சிரமம் ஏற்பட்டு வருவதாக வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: