ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மேலும் 2 தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: கொரோனா மூன்றாவது அலை, ஒமிக்ரான் ஆகிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசி மற்றும், ஒரு தடுப்பு மருந்து ஆகியவைக்கு ஒன்றிய அரசு நேற்று அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை, உருமாறிய தொற்றான ஒமிக்ரான் வைரஸ் ஆகியவற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளது.  கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும், அதேபோன்று வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவீர் ஆகியவைக்கும் ஒன்றிய அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நேற்று டிவிட்டரில், ‘‘ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ),  கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

*மருத்துவ சான்று தேவையில்லை

ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில், `60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உடையவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் போது மருத்துவ சான்று வழங்க வேண்டியதில்லை. அவர்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு முன்னர் தங்களின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ளலாம்.  கூடுதல் டோஸ் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

*மோல்னுபிராவீர் யாருக்கு?

இதில் தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோல்னுபிராவிர் என்பது ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகும். இது நாடு முழுவதும் 13 நிறுவனங்களால் அவசர கால பயன்பாட்டுக்காக சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 18 வயது மேல் உள்ளவர்களுக்கு வழங்கி சிகிச்சை அளிக்க பயன்படும் என ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: