பிரதமரின் வீடு கட்டும் திட்டம் நிகழ்ச்சியில் ஆளுநருக்காக தடபுடல் ஏற்பாடு: ஆளுநர் சென்ற பின் வீட்டின் கதவு, மின் விசிறியை தூக்கிச்சென்ற அதிகாரிகள்..!

விதிஷா: மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டை பெற்ற பயனாளியிடம் 14,000 ரூபாய் ஊராட்சி நிர்வாகம் கேட்டது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தட்செட் என்ற இடத்தில் புத்ராம் என்ற ஆதிவாசிக்கு புதிய வீடு கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதற்கான சாவியை அம்மாநில ஆளுநர் மங்குபாய் மங்குபாய் சாகன்பாய் படேல், பயனாளி புத்ராம் வீட்டிற்கே நேரில் சென்று ஒப்படைத்ததுடன் புதுமனை புகுவிழாவில் பங்கேற்று அதிகாரிகளுடன் இணைந்து உணவு அருந்தினார். ஆளுநரின் வருகைக்காக புதிய கதவுகள் மற்றும் மின் விசிறிகள் அந்த வீட்டில் அமைக்கப்பட்டன.

ஆனால் ஆளுநர் சென்ற பிறகு வீட்டில் அமைக்கப்பட்ட மின் விசிறியை ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் கழற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். அத்துடன் புதிய கதவு அமைக்கப்பட்டதற்காக 14,000 ரூபாய் பில் தொகையை செலுத்த வேண்டும் என்று கேட்டு புத்ராமுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புதிய கதவை பொருந்தும்படி தாம் கேட்காத போது அதற்காக தாம் எப்படி பணம் செலுத்த முடியும் என்று பயனாளி புத்ராம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து கடும் கண்டனத்திற்கு ஆளானதை அடுத்து தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியப்பிரதேச அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories: