கே.எல்.ராகுல் அபார சதம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா ரன் குவிப்பு

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில், தொடக்க வீரர் கே.எல்ராகுலின் அபார சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன், சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தனர். அகர்வால் 60 ரன் (123 பந்து, 9 பவுண்டரி) விளாசி லுங்கி என்ஜிடி வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த புஜாரா, சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து, ராகுலுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தது. கோஹ்லி 35 ரன் எடுத்து (94 பந்து, 4 பவுண்டரி) என்ஜிடி வேகத்தில் முல்டர் வசம் பிடிபட்டார். அதன் பிறகு ராகுல் - ரகானே இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இவர்களைப் பிரிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் திணறினர். அமர்க்களமாக விளையாடிய ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தனது 7வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்துள்ளது. ராகுல் 122 ரன் (248 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்), ரகானே 40 ரன்னுடன் (81 பந்து, 8 பவுண்டரி) களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் என்ஜிடி 17 ஓவரில் 4 மெய்டன் உள்பட 45 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: