ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள அரசு வனத்துறை பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை: கல்வி கற்க முடியாமல் மாணவர்கள் கடும் அவதிa

திருப்பத்தூர்:  ஜவ்வாது மலை பகுதிகளில் அரசு வனத்துறை பள்ளிகளில் பாடப்பிரிவுகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு மலைப்பகுதிகள் உள்ளது. இதில் ஜவ்வாது மலை, புதூர் நாடு, ஏலகிரி மலை பகுதி உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் மூன்று ஊராட்சிகள் உள்ளது. புங்கம்பட்டு நாடு ஊராட்சி, நெல்லி வாசல் நாடு ஊராட்சிகள் உள்ளது. இதில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கல்வி அறிவை மேம்படுத்த கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்திலேயே இங்கு உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டது.

தற்போது ஜவ்வாது மலைப்பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படித்த மாணவ மாணவிகள் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளாக பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். மலைகிராம மக்கள் விவசாயத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தினாலும் கல்வியில் கல்வி அறிவு நிறைந்த பகுதியாக ஜவ்வாதுமலை பகுதி உள்ளது. இங்கு படித்த பட்டதாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த ஜவ்வாது மலை பகுதிகளில் புதூர் நாடு கிராமத்தில் அரசு வனத்துறை மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இயற்பியல் வணிகவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் அந்தப் பாடங்களை கல்வி கற்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் அந்த பாடப்பிரிவுகளை கல்வி கற்க முடியாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மதிப்பெண்களும் மிகவும் குறைந்த அளவில் எடுத்து தேர்வுகளில் தோல்வியையும் தழுவி வருகின்றனர். அதேபோல் நெல்லி வாசல் நாடு கிராமத்தில் அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் வனத்துறை மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் 372 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவ மாணவிகள் சுற்றுவட்டார பகுதிகளான வழுதலம்பட்டு, சேர் காணுர், சேம்பரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தே வந்து பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். இந்த சூழலில் இந்தப் பள்ளிகளிலும் ஆங்கிலம், வணிகவியல், இயற்பியல் வேதியியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் சம்பந்தப்பட்ட பாடங்கள் கற்க முடியாமல் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் இந்த பள்ளிகளில் ஆய்வுக்கூடங்கள் இல்லாத காரணத்தினாலும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்டவர்கள் இல்லாத காரணத்தினாலும் மாணவர்கள் ஆய்வக படிப்பையும் மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது.

நெல்லி வாசல் நாடு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியிலும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் கல்வி பயில முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கல்விக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் நிதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் இல்லை. இந்த பள்ளிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அனைத்து துறைக்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தினாலும், அதேபோல் வனத்துறை பள்ளிகளுக்கு அரசு நிதி பற்றாக்குறை காரணத்தினால் வனத்துறை அதிகாரிகள் இந்த பள்ளியை கண்காணிக்க இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசின் கல்வித்துறை கட்டுப்பாட்டில் மாற்றி கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அனைத்து பாடப்பிரிவுகளும் ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: