சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்திபெற்ற மண்டல பூஜை நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் நாளை பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

நேற்று மாலை 6.15 மணியளவில் இந்த தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை அடைந்தது. இதன் பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த தீபாராதனையை காண்பதற்காக சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நாளை பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நண்பகல் 12.15 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும். இதன் பிறகு கோயில் நடை சாத்தப்படும். மாலை 4 மணியளவில் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.

நாளையுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும். இதன் பிறகு 29ம் தேதி வரை 3 நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் 30ம் தேதி முதல் பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Stories: