பென்னாத்தூர் அருகே ஏரி தண்ணீரில் மூழ்கிய சாலையால் போக்குவரத்து தடை: 4 கி.மீ. சுற்றி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

அணைக்கட்டு:  பென்னாத்தூர் அருகே ஏரி தண்ணீரில் மூழ்கிய சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் அருகே கன்னடிபாளையம், சாத்துபாளையம், பாப்பாந்தோப்பு, கொல்லைமேடு உள்ளிட்ட 4 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். பென்னாத்தூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமங்களுக்கு செல்ல ஏரியின் நடுவே சாலை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாக மாறியது.இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் பென்னாத்தூருக்கு வரவும், பென்னாத்தூரில் இருந்து தங்களது வீடுகளுக்கு சிரமமின்றி சென்று வந்தனர். மேலும், கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கன மழையால் சப்தலிபுரம் ஏரி நிரம்பி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி, அல்லிவரம் கிராமம் வழியாக பென்னாத்தூர் ஏரியில் கலந்து ஏரி நிரம்பியது.

இதன் காரணமாக கன்னடிபாளையம், சாத்துபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும்  சாலையில் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து தடைபட்டது. இதனால் அங்கு வசிக்கும் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வேறு வழியின்றி அல்லிவரம், பூதூர் வழியாக  4 முதல் 5 கிமீ தூரம் வரை சுற்றிக் கொண்டு பென்னாத்தூருக்கு வந்து செல்கின்றனர். இதனால், அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால், துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதையடுத்து சப்தலிபுரம் ஏரியில் மருத்துவ கழிவுகள் கலந்து வந்த தண்ணீரில் இருந்த மீனை பிடித்து மக்கள் சாப்பிட்டதால், அல்லிவரம் கிராமத்தில் பலருக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு முதியவர் மற்றும் சிறுவன்  உயிரிழந்தனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றி சாலையை பாதுகாக்கவும், அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதகுகளை அகற்றி தண்ணீரை வெளியேற்ற வேண்டும்

பென்னாத்தூர்- கன்னடிபாளையம் செல்லும் சாலையில் தண்ணீர் மூழ்கி இருக்கும் ஏரிகளின் மதகு கால்வாய்களை சிலர் மூடியுள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிகளின் மதகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உபரி நீர் வெளியேற்றப்பட்டால், சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்கும். இதன் காரணமாக மீண்டும் போக்குவரத்து துவங்கும். எனவே பொதுப்பணிதுறை அதிகாரிகள் உடனடியாக உபரிநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: