76 அரசுப்பள்ளிகளில் ஆற்றல் மன்றங்கள் ஏற்படுத்தி மின்சாரத்தை சேமிக்கும் வகையில் 2,880 மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு: மின் வாரியத்தின் புதிய முயற்சிக்கு மக்கள் வரவேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 76 அரசு பள்ளிகளில் ஆற்றல் மன்றங்களை அமைத்து பொது மக்களிடம் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றவுடன் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்தது. அரசின் கடும் முயற்சிக்குப் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்ற மாநிலங்கள் எல்லாம் கொரோனாவில் திணறி வந்த நிலையில், நமது மாநிலம் மட்டும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. எல்லா துறைகளிலும் திறமையான அதிகாரிகளை நியமித்து, புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பழுது பார்க்கப்படாமல் மின் கம்பங்கள் முதல் அனைத்து பொருட்களுமே துருப்பிடித்து போகும் அளவுக்கு இருந்தது. இதனால், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லகானி ஆகியோருக்கு சிறப்பு ஆலோசனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் பழுதடைந்த பொருட்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டு வருகிறது.

நிலக்கரி பெருமளவில் மாயமாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மின்வாரியம் புதிய பொலிவுடன் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது மின்வாரியத்தில் புதுமை புகுத்தும் பணிகளில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லகானி ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல், உழைப்பை எளிதாக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் இன்று எலக்ட்ரானிக் சாதனங்களை  பயன்படுத்தாதவர்களே இல்லை.

பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எலக்ட்ரானிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறைந்தது ஒரு வீட்டில் இரண்டு நபர்களாவது ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். மக்கள் தொகை எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே அளவுக்கு மின்சாரத்தின் தேவையும் கூடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டோம்.அந்த வகையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை அனைத்து மாவட்டத்திலும் மின் சிக்கன வாரம் கொண்டாடப்பட்டது. இந்த மின் சிக்கன வார கொண்டாடத்தில் கருத்தரங்குகள், விவாதம், திறன் மேம்பாட்டு அமர்வுகள் மற்றும் மின் சேமிப்பு நுட்பங்கள் பற்றிய கருத்தரங்கங்கள், பல்வேறு வகை நுகர்வோருக்கு ஆற்றல் திறன் கருத்துருக்கள் குறித்த போட்டிகளை ஏற்பாடு செய்தல், பொது மக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் மற்றும் மனித சங்கிலிகள் நடத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட உபகரணங்கள், சாதனங்களை மேம்படுத்துவதற்கான பயிலரங்குகள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிகள் நடத்தப்பட்டது.

அதேபோல், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மின் சிக்கனம் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரை, வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டிகளும், சமீபத்திய தொழில்நுட்ப அறிவு பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பல செயல்கள் மேற்கொள்ளப்பட்டது. தேவையற்ற மின் உபயோகத்தை தவிர்ப்போம், மின் விரயத்தை தடுப்போம், மின் சிக்கனம் செய்து அன்னை பூமியை காப்போம், உலக வெப்பமயமாதலை தடுப்போம் மின் மொழிகள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. பேருந்துகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், விளம்பரப்பலகைகள் மூலம் மின்சிக்கனம் குறித்த செய்திகள், அது குறித்த விளம்பரங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பல்வேறு வழிகளிலும் மின்சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்த செய்திகளை தமிழகத்தின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் சிறப்பாக கொண்டு செல்வதால் தமிழகத்தின் மின் பயன்பாட்டில் மிகப்பெரிய அளவில்  மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் வாரியத்தின் இந்த முயற்சி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த வருடம் கூடுதலாக ஆற்றல் மன்றங்களை (எனர்ஜி கிளப்) அனைத்து அரசு பள்ளிகளிலும் நிறுவப்பட்டு மாணவர்கள் மூலம் மின்சிக்கன விழிப்புணர்வை அதிகரிக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 76 அரசு பள்ளிகளில் 2,880 மாணவர்களை இந்த மன்றத்தில் இணைத்து ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு மற்றும் மின்சாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பற்றிய செய்திகளை அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பரப்புவதற்காக வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு ரூ.3 கோடி செலவில் அரசு பள்ளிகளில் உள்ள குழல் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகளாக மாற்றுவதற்கும், சாதாரண மின்விசிறிகளுக்கு பதிலாக 5 நட்சத்திர குறியீட்டுடன் கூடிய மின்விசிறிகளாக மாற்றுவதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது.

இதற்கான பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. இதனால், கணிசமான மின்சாரத்தை சேமிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு ஆசிரியருக்கு எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு மற்றும் மின்சார பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் இத்திட்டத்தின் கருத்துருக்கள் பொதுமக்களை வெகுவிரைவாக சென்று அடைகின்றது. மேலும், 51 ஆற்றல் மன்றங்கள் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த முற்சிகளை தொடர்ந்து செய்யவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் தொடர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: