நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் திடீர் திருப்பம் எனது மகள் ஷீனா போரா உயிருடன் தான் இருக்கிறார்: சிபிஐக்கு தாய் இந்திராணி முகர்ஜி பரபரப்புக் கடிதம்

மும்பை: ஷீனா போரா கொலை செய்யப்பட்டதாக கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, ஷீனா போரா உயிருடன் உள்ளதாக சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2012ல் நடந்த ஷீனா போரா கொலைச் சம்பவம், நாட்டையே உலுக்குவதாக இருந்தது. இந்திராணி பீட்டர் முகர்ஜியை 2வதாக திருமணம் செய்துள்ளார். இந்திராணிக்கும் அவருடன் சேர்ந்து வாழ்ந்த முதல் கணவர் சித்தார்த் தாஸ்க்கு பிறந்தவர் ஷீனா போரா. கவுஹாத்தியில் வசித்து வந்த இவரை, தன்னுடன் வசிக்க மும்பைக்கு அழைத்து வந்துள்ளார் இந்திராணி முகர்ஜி.

இதற்கிடையே, பீட்டர் முகர்ஜியின் மூத்த தாரத்து மகன் ராகுல் முகர்ஜிக்கும், ஷீனா போராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒரு வகையில் சகோதர உறவு என்று தெரியாமலேயே காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு இந்திராணி முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், பீட்டர் முகர்ஜி சம்மதித்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, ஷீனா போரா மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டதாக, இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார். இதற்கிடையில், ஷீனா போரா திடீரென விலகியதன் காரணம் புரியாமல் தவித்த ராகுல் முகர்ஜி, வோர்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார், விசாரணை நடத்தி இந்திராணியையும் டிரைவர் ஷியாம்வர் ராயையும் 2015ம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அடுத்தடுத்த விசாரணையில், ஷீனா போராவை இந்திராணி கழுத்தை நெரித்து கொன்றதாக டிரைவர் வாக்குமூலம் அளித்தார். இதில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திராணி முகர்ஜி கடந்த 2015ம் ஆண்டு முதல் மும்பை பெண்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதற்கிடையே, சிபிஐக்கு கடந்த நவம்பர் 27ம் தேதி இந்திராணி முகர்ஜி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறை அதிகாரி ஒருவர் சுற்றுலா சென்றிருந்தபோது, ஜம்மு காஷ்மீரில் ஷீனா போரா இருப்பதை பார்த்ததாக நவம்பர் 25ம் தேதி தெரிவித்தார். எனவே ஷீனா போரா உயிருடன் உள்ளார் என, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்த அவரது வக்கீல் மறுத்துவிட்டார்.

Related Stories: