விருதுநகர் சாலையோரங்களில் எரிக்கும் குப்பையால் ஏற்படுதே மூச்சுத்திணறல் : வாகன ஓட்டிகள் புகார்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றிய சிவஞானபுரம், ரோசல்பட்டி, பாவாலி, கூரைக்குண்டு ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், கடைகளில் முறையாக, முழுமையாக குப்பைகளை வாங்குவதில்லை. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து குப்பை வாங்க வரும் பணியாளர்களில் சிலர் காசு கொடுப்பவர்களிடம் மட்டும் குப்பைகளை வாங்குகின்றனர்.இதனால் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் சேரும் குப்பைகளை உரிமையாளர்கள் சாலையோரங்கள், ஓடைகள், நான்கு வழிச்சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர். அத்துடன் அந்த குப்பைகளை தீ வைத்தும் எரிக்கின்றனர். இதனால் சாலைகளில் புகைமூட்டம் என்பது தினசரி நிகழ்வாகிறது. சத்திரெட்டியபட்டி துவங்கி கலெக்டர் அலுவலகம் வரை நான்கு வழிச்சாலையோரங்களில் குப்பைகள் இருபுறமும் குவியல், குவியலாக குவிந்து கிடக்கின்றது.

நான்கு வழிச்சாலை, கவுசிகா ஆற்றுப்படுகை, சாத்தூர் ரோடு கவுசிகா ஆற்றுப்பாலம், சிவகாசி ரோடு கவுசிகா ஆற்றுப்பாலம், மதுரை ரோடு மேம்பாலம் அருகே உள்ள ஓடையில் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் நோயில் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், `` நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் குப்பைகளை முழுமையாக வாங்குவதில்லை. குப்பைகளை தேவையற்ற இடங்களில் கொட்டுவதை தவிர்க்க, முக்கிய இடங்களில் குப்பைகளை கொட்டி, அகற்ற உள்ளாட்சி அமைப்புகள் தொட்டிகளை வைக்க வேண்டும். குப்பைகளை எரிக்கப்படும் இடங்களில் காமிராக்களை பொருத்தி குப்பைகளைக் கொட்டி எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: