லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையில் திட்டமிட்ட சதி ஒன்றிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

புதுடெல்லி:  உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அலட்சியத்தால் நடந்ததாக முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், திட்டமிட்டே இந்த படுகொலை நடத்தப்பட்டதாக இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது.

நாடாளுமன்றத்தில் நேற்று இது எதிரொலித்தது. நேற்று காலை மக்களவை தொடங்கியவுடன், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும்படி அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால்,அவையை  சபாநாயகர் ஓம் பிர்லா 2 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியபோதும், அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைத்தார். மாநிலங்கவையிலும் இந்த பிரச்னையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், மதிய உணவுக்கு முன்னதாக அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய போது, ஒமிக்ரான் வைரஸ் தொற்று சூழல் குறித்த விவாதத்திற்கு அவையின் துணை தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் அழைப்பு விடுத்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லக்கிம்பூர் விசாரணை அறிக்கை குறித்த விவாதத்துக்கு அனுமதி கோரினார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. திரிணாமுல் உறுப்பினர் சுஷ்மிதாவை பேசும்படி அவை தலைவர் கூற, அவர் 12 எம்பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை எழுப்பினார். ஆனால், ஒமிக்ரான் குறித்து பேசும்படி அவை தலைவர் அறிவுறுத்தினார். அதே நேரம், சுகாதார துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா அவையில் இல்லாததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்து முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அஜய் மிஸ்ராவை  பதவி நீக்கம் செய்யும் கோரிக்கையை பாஜ நிராகரித்துள்ளது.

Related Stories: