ஆட்சியில் நம்பர்-2 இடத்தில் இருந்தவர் வடகொரிய அதிபர் ஜங்கின் தாத்தா 101 வயதில் மரணம்

சியோல்: வடகொரியாவை நிறுவிய கிம் இல் சங்கின் சகோதரரும், அதிபர் கிம் ஜங் உன்னின் தாத்தாவுமான கிம் ஜோங் ஜு, தனது 101வது வயதில் இறந்துள்ளார். வடகொரியா நாட்டை கடந்த 1948ம் ஆண்டு நிறுவிய கிம் இல் சங், தனது வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டை ஆண்டார். கம்யூனிச நாடான இதில், சர்வாதிகாரியாக செயல்பட்டார். இவர் கடந்த 1994ம் ஆண்டு இறந்த பிறகு,  அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் கடந்த 2011ம் ஆண்டு இறந்தார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, இன்று வரையில் 3வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார்.

கிம் இல் சங்கின் இளைய சகோதரரான கிம் யங் ஜு, தனது சகோதரரின் ஆட்சிக் காலத்தில் வடகொரியாவின் பலம் வாய்ந்த தலைவராக விளங்கினார். கிம் இல் சங்குக்கு அடுத்தப்படியாக நம்பர்-2 இடத்தில் இருந்து, நிர்வாகங்களை கவனித்தார். தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இவர் தாத்தா முறையாகிறார். கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு இவர் பொதுவெளியில் தோன்றினார். அதன் பிறகு, உடல்நிலை பாதிப்பால் வெளியே வராமல் இருந்தார். இந்நிலையில், இவர் இறந்து விட்டதாக வடகொரியா நேற்று அறிவித்தது. இவர் கடந்த 1920ம் ஆண்டு பிறந்ததாக, வடகொரியாவின் எதிரி நாடான தென்கொரியா தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது இவருடைய வயது 101. இவர் எப்போது இறந்தார் என்பதை வடகொரிய அரசு தெரிவிக்கவில்லை.

Related Stories: