பரோடாவிடம் மோசமாக தோற்றாலும் பி பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது தமிழகம்: விஜய் ஹசாரே கோப்பை

திருவனந்தபுரம்: விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பரோடாவிடம் படுமோசமாக தோற்றாலும், எலைட் பி பிரிவில் முதலிடம் பிடித்த தமிழகம் காலிறுதிக்கு முன்னேறியது. முதல் 3 லீக் ஆட்டங்களில் மும்பை, கர்நாடகா, பெங்கால் அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த தமிழகம், 4 வது போட்டியில் புதுச்சேரியிடம்   டி/எல் விதிப்படி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில்  பரோடாவை எதிர்கொண்டது.

டாஸ் வென்று பேட் செய்த பரோடா 39 ஓவரில்  114 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக க்ருணால் பாண்டியா 38 ரன் எடுத்தார். உதிரி கணக்கில் 25 ரன் கிடைத்தது. தமிழக பந்துவீச்சில் சித்தார்த், சுந்தர், சந்தீப், சஞ்ஜெய் தலா 2, ஹரிநிஷாந்த், சாய்கிஷோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தமிழகம் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20.2 ஓவரில் வெறும் 73 ரன்  மட்டுமே எடுத்து சுருண்டது. நிஷாந்த், நாராயண் தலா 11, சஞ்ஜெய் யாதவ் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.

பரோடா தரப்பில் பார்கவ் பட் 3, க்ருணால், குர்ஜிந்தர் தலா 2, லக்மன் மெரிவாலா ஒரு விக்கெட் எடுத்தனர். பரோடா 41 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எலைட் பி பிரிவில் நேற்று நடந்த மற்ற லீக் ஆட்டங்களில் பெங்கால் அணி கர்நாடகாவையும், புதுச்சேரி அணி மும்பை அணியையும் வீழ்த்தின. லீக் சுற்றின் முடிவில் தமிழகம், கர்நாடகா, பெங்கால், புதுச்சேரி அணிகள் தலா 3 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்த தமிழகம் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: