வைகை அணையில் இருகரைப் பூங்கா இணைப்பு பாலம் சேதம்-புதிதாக பாலம் அமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டி :  வைகை அணையில் இருகரைப் பூங்கா இணைப்பு பாலம் சேதமடைந்துள்ளதால், அதை உயர்த்தி புதிதாக அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. இதன் முன்புறம் ஆற்றின் இருபுறமும் வலது, இடது கரைப் பூங்காக்கள் உள்ளன. இவைகளில் சிறுவர்கள், பெரியவர்கள் பொழுது போக்கும் வகையில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக வைகை அணைப் பூங்கா விளங்கி வருகிறது.

இங்கு தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவுக்கு செல்ல பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3 என பொதுப்பணித்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வலது கரையில் பெரியாறு மாதிரி வைகை பூங்கா உள்ளது. இப்பகுதிக்கு செல்லவும் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருகரை பூங்காக்களை இணைப்பதற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கட்டணம் செலுத்திவிட்டு சென்றால், பாலம் வழியாகச் சென்று, மறுகரையில் உள்ள பூங்காவையும் பார்க்கலாம்.

சமீபத்தில் பெய்த மழையால், அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையிலிருந்து ஆற்று வழியாக அதிக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இருகரைகளை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியதால், சுற்றுலாப் பயணிகள் பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு, இருபுறமு முட்செடிகள் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இரவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், அணையிலிருந்து 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. அப்போது  இருகரைகளையும் இணைக்கும் பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதில், பாலத்தின் தடுப்புக் கம்பிகள், துண்கள் சேதமடைந்துள்ளன. மேலும், பாலத்தை முழ்கி தண்ணீர் செல்வதால், பாலம் பாசம் பிடித்து காணப்படுகிறது.  

எனவே, மீண்டும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது ஆபத்தானது. பாலத்தை உயர்த்தி புதிதாக அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: