ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு மபி அரசு ரூ.1 கோடி நிதி: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

போபால்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் ஜிதேந்திர குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். ஜிதேந்திர குமாரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சோக சம்பவத்தில் பலியானவர்களில் பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான நாயக் ஜிதேந்திர குமாரும் ஒருவராவார். அவரது உடல், சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் சோஹோர் மாவட்டம் தமண்டா கிராமத்தில் உள்ள குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. ஏராளமான மக்கள் திரண்டு வந்த ஜிதேந்திர குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மபி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, வீரர் ஜிதேந்திர குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், ஜிதேந்திர குமாரின் மகன் படிப்புக்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அறிவித்தார். ஜிதேந்திர குமாரின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினர். இதைத் தொடர்ந்து, ஜிதேந்திர குமார் சிதைக்கு அவரது ஒன்றரை வயது மகன் தீ மூட்டினார். முழு ராணுவ மரியாதையுடன் ஜிதேந்திர குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சாய்தேஜா உடல் அடக்கம்

பிபின் ராவத்தின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளி அடுத்த எகுவரேவுலபல்லி கிராமத்தை சேர்ந்த சாய் தேஜாவும் இறந்தார். இந்நிலையில் நேற்று காலை 5.45 மணிக்கு பெங்களூருவிலிருந்து, சாய் தேஜாவின் உடலை சொந்த கிராமத்திற்கு ராணுவ அதிகாரிகள் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். சாய் தேஜாவின் உடல், அவரது வீட்டில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டு அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மைதானத்தில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாய் தேஜாவின் வீட்டின் அருகே அவரது சொந்த நிலத்தில் ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: