வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் வித்தியாசம் என குற்றச்சாட்டு பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தேர்தலை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பொழிச்சலூரை சேர்ந்த வி.பாபு என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புனித தோமையார் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல், கடந்த அக்டோபர் 6ம் தேதி நடந்தது. நான் உள்பட மொத்தம் 9 பேர் இந்த பதவிக்கு போட்டியிட்டோம். மொத்தமுள்ள 31,045 வாக்குகளில் 16,163 வாக்குகள்  பதிவாகின. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 15,481 வாக்குகள்  பதிவானதாகவும், அதில் நான் 5,149 வாக்குகள் பெற்றதாகவும், வனஜா என்பவர் 5,233 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

மொத்தம் 16,163 வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு எண்ணிக்கையை குறைத்து தேர்தல் அதிகாரி அறிவித்து முடிவையும் வெளியிட்டுள்ளார். பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையில் 14 வார்டுகளில் வித்தியாசம் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி இதை சரியாக கவனிக்காமல் முடிவை அறிவித்துள்ளார். தமிழ்நாடு ஊராட்சி விதிகளுக்கு முரணாக தேர்தல் அதிகாரி செயல்பட்டுள்ளார். எனவே, பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அலெக்சிஸ் சுதாகர் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் பொழிச்சலூர் தேர்தல் அதிகாரி பதில் தருமாறு உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு ஊராட்சி விதி கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என கூறி, விசாரணையை வரும் 14ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.

Related Stories: