10 ஆயிரம் மானியத்தில் புது மின்மோட்டார் வாங்க 2 ஆயிரம் விவசாயிகளுக்கு நிர்வாக அனுமதி: ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

சென்னை: ரூ.10 ஆயிரம் மானியத்தில் 2 ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் வாங்க நிர்வாக அனுமதி வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அரசாணை: 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய வரவு-செலவு கூட்டத்தொடரில் துறை மானியக்கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 1800 ஆதிதிராவிடர் மற்றும் 200 பழங்குடியின விவசாயிகள் தங்கள் நிலம் மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டார் வாங்க தலா ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான, தாட்கோ மேலாண்மை இயக்குனரின் கருத்துரு அரசால் நன்கு பரிசீலிக்கப்பட்டது. அதனடிப்படையில், தாட்கோ, மேலாண்மை இயக்குனரின், கருத்துருவை ஏற்று ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 1800 விவசாயிகளுக்கும், பழங்குடியினத்தை சேர்ந்த 200 விவசாயிகளுக்கும் மொத்தம் 2000 விவசாயிகளுக்கு தங்கள் நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டார் வாங்க தலா ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்க தேவைப்படும் ரூ.2 கோடி செலவினத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இத்திட்டத்தினை உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு தாட்கோ மேலாண்மை இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

நிர்வாக ஒப்பளிப்பு வழங்கப்பட்ட ரூ.2 கோடியில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மானியமாக வழங்க ரூ.1.80 கோடி செலவினத்தை ஒன்றிய அரசின் PMAJAY திட்ட நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளவும், 200 பழங்குடியின விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மானியமாக வழங்க ரூ.20 லட்சம் செலவினத்தை மாநில அரசின் நிதியிலிருந்து விடுவித்திடும் வகையில் உரிய கருத்துருவை பயனாளிகளை தெரிவு செய்த பின்னர் அரசுக்கு அனுப்புமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர், பழங்குடியின நல இயக்குனர், தாட்கோ மேலாண்மை இயக்குனர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: