போயஸ் கார்டன் இல்லத்தில் விரைவில் குடியேறுவேன்!: தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது ஜெ. இல்ல சாவி...அதிமுகவுக்கு பின்னடைவு..!!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அதிமுக கூறியிருந்த நிலையில் சாவி ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நிலத்தை கையகப்படுத்துவதற்கான தொகையையும் உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. ஜெயலலிதா இல்லம் அரசின் சொத்தாக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடி வாரிசுதாரர்கள் தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசு தீபா, தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று அண்மையில் உத்தரவிட்டார். ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை 3 வாரங்களில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் இருக்கும் போது வேதா இல்லத்தை நினைவில்லம் மாற்றவது தேவையற்றது என ஐகோர்ட் கூறியிருந்தது. இதை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவியைக் கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தீபாவும், தீபக்கும் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாரிசுகளான  தீபா, தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார். போயஸ் கார்டன் இல்லம் சென்று சாவியை தீபா, தீபக் பெற்றுக்கொண்டனர். அச்சமயம் தீபாவின் கணவர் மாதவன் உடனிருந்தார். தற்போது தீபா, ஆதரவாளர்களுடன் போயஸ் இல்லம் சென்றார். அங்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜெயலலிதா இல்லம் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால் அதிமுக மேல்முறையீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தீபா பேசுகையில், போயஸ் கார்டன் இல்லத்தில் விரைவில் குடியேறுவேன். ஜெயலலிதா வீட்டை வைத்து அதிமுக அரசியல் செய்கிறது. இது போராட்டம் மட்டுமல்ல, உரிமை போராட்டத்திலும் வெற்றி. எங்கள் குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்தவர் ஜெயலலிதா. அதிமுக வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாக சந்திக்க தயார் என்றார். வருவாய்த்துறை முன்னிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் திறக்கப்பட்டது.

Related Stories: