நாடாளுமன்றத்தில் பிபின் ராவத்துக்கு இரங்கல் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் இறந்த விவகாரம் குறித்து முப்படை விசாரணை தொடங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியாகினர். இந்த நிலையில் பிபின் ராவத் மறைவுக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அவர் விவரித்தார். அப்போது ராஜ்நாத் பேசியதாவது:கோவை சூலூர் விமான தளத்தில் இருந்து விமான படையின் எம்ஐ-17வி5 என்ற ஹெலிகாப்டர் புதன் கிழமை காலை 11.48 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு வெலிங்டனில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 12.08 மணி அளவில் சூலூர் விமான தளத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை ஹெலிகாப்டர் இழந்தது. இதையடுத்து, குன்னூர் அருகே வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்துள்ளது. அங்கு தீப்பற்றி எரிவதைப் பார்த்த பொதுமக்கள் விரைந்துள்ளனர். தகவல் அறிந்த உள்ளூர் நிர்வாகத்தின் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து, உயிருக்கு போராடியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன. பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் இறந்து விட்டனர். குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து பெங்களூரு கமாண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார். அவருக்கு தற்போது உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்படும்.

பிபின் ராவத்தின் இறுதி சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் செய்யப்படும். மற்ற ராணுவ வீரர்களின் இறுதி சடங்குகள் உரிய ராணுவ மரியாதையுடன் செய்யப்படும். விபத்து குறித்து இந்திய விமானப்படை தலைமையில் முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. ஏர்மார்ஷல் மனவேந்திரா சிங் தலைமையிலான குழு வெலிங்டனுக்கு சென்று விசாரணையை தொடங்கி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் இதே அறிக்கையை அவர் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார்.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முதல் முப்படை தளபதியாக ராவத் தேசத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை செய்ததாகவும், தேச பாதுகாப்பில் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும் புகழஞ்சலி செலுத்தினார். மாநிலங்களவையில் துணை தலைவர் ஹரிவன்ஸ், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை நவீனப்படுத்த ராவத் பல முயற்சிகள் எடுத்ததாகவும், நாடு தன்னிகரில்லாத வீரரையும், மிகச்சிறந்த ராணுவ தலைவரையும் இழந்து விட்டதாக இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

இரங்கல் தெரிவிக்க அனுமதி மறுப்பு காங்., திமுக எம்பிக்கள் அவை புறக்கணிப்பு

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு நாடாளுமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மாநிலங்களவையில் அனைத்து கட்சிகளின் அவைத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து பேச, எதிர்க்கட்சிகளின் அவைத்தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே அனுமதி கோரினார். ஆனால், அவை சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு தனித்தனியாக இரங்கல் தெரிவிக்க தேவையில்லை என அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் அனுமதி மறுத்தார்.இதனால், அதிருப்தி அடைந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த எம்பி மல்லிகார்ஜூனா கார்கே அளித்த பேட்டியில், ‘‘அரசின் இதுபோன்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உயர்மட்ட ராணுவ தலைவர் மறைவுக்கு எதிர்க்கட்சியினர் இரங்கல் தெரிவிக்கக் கூட அனுமதிக்காதது என்ன மாதிரியான ஜனநாயகம் என தெரியவில்லை’’ என்றார். திமுக எம்பி இளங்கோவன் கூறுகையில், ‘‘நாடாளுமன்றம் ஏதோ தங்களுக்காக மட்டுமே இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளுக்கானதல்ல என்றும் ஒன்றிய அரசு எண்ணுகிறது. இது வருந்தத்தக்கது’’ என்றார். முன்னதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 12 எதிர்க்கட்சி எம்பிக்கள், பிபின் ராவத் மரணத்தை தொடர்ந்து நேற்று தங்கள் போராட்டத்தை ரத்து செய்தனர்.

ஜனாதிபதியிடம் நேரில் விளக்கம்

ஆயுதப்படையின் உச்சபட்ச கமாண்டர் ஜனாதிபதி ஆவார். இதைத் தொடர்ந்து, அரசு நடைமுறைகளின்படி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து விபத்து குறித்து விளக்கம் அளித்தார். விபத்து நடந்த சூழல் குறித்தும், அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

Related Stories: