ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை அடுத்த முப்படை தலைமை தளபதி நரவனே?

புதுடெல்லி: அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி எம்.எம்.நரவனே நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு தனித்தனியாக தளபதிகள் இருந்தாலும், போர் காலங்களில் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டதே முப்படைகளின் தலைமை தளபதி பதவியாகும். நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பொறுப்பை பிபின் ராவத் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஏற்றுக் கொண்டார். அவர் திடீரென நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியை நியமிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு களமிறங்கி உள்ளது.

இதற்காக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூடி விரைவில் முடிவெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் முப்படை தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இப்பதவிக்கு தற்போதைய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தவிர கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுகின்றன.திருத்தப்பட்ட ராணுவ விதிகளின்படி, முப்படை தலைமை தளபதியின்  அதிகபட்சம் 65 வயது வரையிலும் அல்லது 3 ஆண்டுகள், இதில் எது குறைவோ அதுவரை பதவி வகிக்கலாம். நரவனே வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். எனவே இவரை ஒன்றிய அரசு நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: