வாக்கு பதிவு விவரங்களை விரைவாக வெளியிட கோரி வழக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: விசாரணை மே.24க்கு ஒத்தி வைப்பு

புதுடெல்லி: வாக்குப்பதிவு விவரங்களை விரைவாக வௌியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஒருவாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) என்ற அமைப்பு கடந்த 10ம் தேதி ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், ‘‘நடைபெற்று வரும் மக்களவை பொதுத்தேர்தலில் மூன்று கட்ட வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் வாக்குப்பதிவுக்கான முழு விவரங்களை மிகவும் தாமதமாகவே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதிலும் ஏராளமான குளறுபடிகள் இருக்கிறது.

குறிப்பாக தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு நடந்த நாளன்று வௌியிட்ட எண்ணிக்கை விவரங்களுக்கும், இறுதியாக வெளியிட்ட விவரங்களுக்கும் இடையில் 5 அல்லது 6 சதவீதம் அளவுக்கு வேறுபாடு உள்ளது. இது பொதுமக்களிடம் நிறைய சந்தேகங்களை எழுப்பி உள்ளது. குறிப்பாக தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே வாக்குப்பதிவு விவரங்களை உடனடியாகவும், துல்லியமாகவும் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘தேர்தல் அதிகாரியிடம் இருந்து படிவம் 17சி-ல் இருந்து புள்ளி விவரங்களை பெற்று வெளியிடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என்பதே எங்களது தரப்பு குற்றச்சாட்டு” என்று தெரிவித்தார். வாதத்தின்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஒரே இரவில் விவரங்களை வாங்கி வெளியிடுவதற்கு உங்களுக்கு என்ன பிரச்னை உள்ளது. மாலை 6 அல்லது 7 மணிக்குள் வாக்குப்பதிவு முடிந்து விடுகிறது. இதையடுத்து அதிகாரிகளிடம் இருந்து தரவுகளை வாங்கி நீங்கள் பதிவேற்றம் செய்யலாமே. உங்களுக்கு போதுமான கால அவகாசம் உள்ளது தானே” என்று தேர்தல் ஆணையத்துக்கு கேள்வியெழுப்பினார்.

தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் சர்மா அளித்த பதிலில், ‘‘இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஒரு செட் டேட்டா உள்ளது. குறிப்பாக தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக முதல் வாக்காளர் பட்டியல் சரியான ஒன்றாகதான் இருந்தது. ஆனால் புதிய வாக்காளர்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கையில் பெரும் தாக்கம் தான் இப்போது பிரச்னையை உருவாக்குகிறது. இருப்பினும் தரவுகள் அனைத்தும் துல்லியமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக டேட்டாவை ஒழுங்கு செய்ய ஒரு செயலி உள்ளது. அதுதொடர்ந்து விவரங்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறது.

அதனால் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அது சரி செய்யப்படும் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘இதில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிந்து விட்டதே என்றார். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “அதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஏனெனில் திடீரென 6 சதவீத வாக்குகள் உயர்வதால் இ.வி.எம் மாற்றப்படுவதாக வாக்களித்த குடிமக்கள் சந்தேகமடைகிறார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தலைமை நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் 17சி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா?. 66 சதவீத வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் தெரிவிப்பது 17சி தரவுகளின் அடிப்படையில் தானே?. அதில் ஏதேனும் தேர்தல் ஆணையத்துக்கு பிரச்னை உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ‘‘அதில் எங்களுக்கு எந்தவித சிரமங்களும் கிடையாது. இருப்பினும் அதில் கொஞ்சம் நேரம் எடுக்கும். அதனைத்தவிர வேறு ஒரு பிரச்னையும் கிடையாது . இருப்பினும் தற்போது வைக்கப்படுவது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. தேவைப்பட்டால் இரவு முழுவதும் உட்கார்ந்து நாங்கள் பணி செய்ய தயாராக இருக்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் நாங்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட பிரதான வழக்கு கடந்த 2019 ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. மேலும் இடைக்கால மனுவில் விசாரணை நடத்தி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் தேர்தல் ஆணையம் ஒரு தெளிவான விவரங்களை தாக்கல் செய்ய வில்லை” என்று கேள்வி எழுப்பியதோடு, வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதங்களை விரைவாக வெளியிடக்கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

The post வாக்கு பதிவு விவரங்களை விரைவாக வெளியிட கோரி வழக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: விசாரணை மே.24க்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: