டெல்லியில் நடக்கிறது லாலு மகன் தேஜஸ்விக்கு இன்று நிச்சயதார்த்தம்: மணமகள் குறித்து சஸ்பென்ஸ்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி தம்பதிக்கு 9 குழந்தைகள். இதில் 2 மகன்கள், 7 பேர் மகள்கள் ஆவர். 8 பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில், கடைக்குட்டியான 32 வயதாகும் தேஜஸ்விக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. லாலு, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை சென்ற பிறகு, அவரது இடத்தில் கட்சியை வழி நடத்தி வருகிறார் தேஜஸ்வி. 2 ஆண்டு துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு தேஜஸ்வி தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி, நூலிழையில் ஆட்சியை தவற விட்டது.

தேர்தலுக்குப் பிறகு தேஜஸ்வி திருமணம் செய்து கொள்வார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமண தகவல்கள் வெளியாகி உள்ளன. தேஜஸ்வியின் நிச்சயத்தார்த்தம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில், நெருக்கமான உறவினர்கள் 50 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். திருமணம் அடுத்த ஓரிரு வாரங்களில் நடக்கும் என கூறப்படுகிறது. ஆனால், மணப்பெண் யார் என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்திற்குப் பிறகு அவர் யார் என்பது தெரியப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேஜஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவுக்கு கடந்த 2018ல் திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான 6 மாதத்தில் அவரது மனைவி ஐஸ்வர்யா விவகாரத்து நோட்டீஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More