ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் கம்மின்ஸ் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து: 147 ரன்னில் ஆல் அவுட்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பேட் கம்மின்ஸ் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பிரிஸ்பேன், காபா அரங்கில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் இன்னிங்சை தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின்  முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த டேவிட் மலான் (6 ரன்), கேப்டன் ஜோ ரூட்(0) இருவரும் ஜோஷ் ஹேசல்வுட் வேகத்தில் வெளியேறினர்.

கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த  ஹசிப் ஹமீது 25 ரன், அதிரட்இ ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 5 ரன் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 26.4 ஓவரில் 60 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஆலிவர் போப் - ஜோஸ் பட்லர் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர். பட்லர் 39 ரன் (58 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஸ்டார்க் வேகத்தில் கேரி வசம் பிடிபட்டார். போப் 35 ரன் (79 பந்து, 2 பவுண்டரி) எடுத்து கேமரான் கிரீன் வேகத்தில் வெளியேறினார்.

ராபின்சன் (0), மார்க் வுட் (8), கிறிஸ் வோக்ஸ் 21 ரன் (24 பந்து, 4 பவுண்டரி) எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் அணிவகுக்க, இங்கிலாந்து 50.1 ஓவரில் 147 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  ஆஸி. தரப்பில் கம்மின்ஸ் 13.1 ஓவரில் 3 எய்டன் உள்பட 38 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 2, கேமரான் கிரீன் 1 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து ஆஸி. முதல் இன்னிங்சை தொடங்குவதற்கு முன்பாக கனமழை கொட்டியதால், அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

More