சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்: மக்கள் பாராட்டு

நாகை: நாகை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சுழல் மாசுப்படுவதை தடுக்கும் விதமாக நாகையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் தற்போது காற்று மாசு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் புழுதி காணப்படுவதால் வாகனங்களில் செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடையாமல் தடுக்க அனைத்து பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இருசக்கர வாகனங்களிலோ, கார் உள்ளிட்ட வாகனங்களிலோ அலுவலகம் வரக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதற்கு மாற்றாக பொது போக்குவரத்தையோ, நடந்தோ அல்லது சைக்கிளிலோ அலுவலகம் வர பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் மிதிவண்டியில் சென்றுள்ளார். காடம்பாடி பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள இல்லத்தில் இருந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்தடைந்தார். மாவட்ட ஆட்சியரோடு அதிகாரிகளும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தடைந்தனர்.

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க உள்ளூரில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் வாகனம் வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவரும் காலை மாலை என இரு வேலை சுமார் 5 அல்லது 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கூறினார். மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் வருவதை கண்ட பொது மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அவர்களும் இது போன்று சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஈடுபடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ட்விட்டர் வாயிலாக மாணவர்களுக்கு பதில் அளித்து சுவாரசியம் ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொரு மாவட்ட ஆட்சியர் மக்களை கவரும் வகையில் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: