நாடாளுமன்ற முடக்கத்துக்கு ஒன்றிய அரசே காரணம் நடந்து முடிந்த தொடருக்காக சஸ்பெண்ட் செய்ய முடியாது: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தொடருக்காக, எம்பி.க்கள் மீது இப்போது சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுக்க முடியாது. இந்த பிரச்னையால் நாடாளுமன்ற முடங்கி இருப்பதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்,’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 29ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 12 எம்பி.க்களை, குளிர் கால தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் மாநிலங்களவை கூடியதும், எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெற வலியுறுத்தியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, 3 மணி வரையும் அதன்பின் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி.க்கள்,  காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரசை சேர்ந்த மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில், ``மாநிலங்களவை முடக்கத்துக்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவைத் தலைவர், அரசு நிர்வாகத்தை சந்தித்து, மழைக்காலக் கூட்டத் தொடரில் நடந்து கொண்டதற்காக எம்பி.க்களை முறைகேடாக, ஜனநாயகத்துக்கு எதிராக சஸ்பெண்ட் செய்ய முடியாது என்பதை வலியுறுத்தினோம். கடந்த முறை நடந்த அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, அதற்காக எம்பி.க்களை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு உரிமை கிடையாது’ என்றார்.

பாஜ எம்பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை

நாடாளுமன்ற தொடரில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு போதுமான அளவுக்கு பாஜ எம்பி.க்கள் அவைக்கு வருவதில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று, நாடாளுமன்ற எம்பி.க்கள் அம்பேத்கார் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மோடி, பாஜ எம்பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆவது குறித்து கடிந்து கொண்டார். ‘எம்பி.க்கள் தொடர்ச்சியாக கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டும்.

சிறுவர்கள் கூட ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப கூறுவதை விரும்ப மாட்டார்கள். எம்பி.க்கள் தங்களின் செயல்பாட்டை  மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாற்றங்கள் நிகழும்,’ என்று எச்சரித்தார். டிஆர்எஸ் புறக்கணிப்பு தெலங்கானாவில் கையிருப்பில் உள்ள அரிசியை கொள்முதல் செய்யும்படி வலியுறுத்தி, தினமும் அமளியில் ஈடுபட்டு வந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்பி.க்கள். இத்தொடரின் எஞ்சிய நாட்களை முழுமையாக புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தனர்.

Related Stories: