9 மாதங்களுக்கு பின் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த தெய்வானை யானை

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான 17 வயதான பெண் யானை தெய்வானை கடந்த 2015ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 2017 ம் ஆண்டு பாகனின் உதவியாளரை யானை தாக்கியது. அப்போது யானையை பரிசோதித்த மருத்துவர்கள் காற்றோட்டமான சூழலில் யானையை பராமரிக்க ஆலோசனை வழங்கியதை தொடர்ந்து மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்தில் யானைக்கு ரூ.10 லட்சம் செலவில் நீச்சல்குளம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது.

இந்த நீச்சல்குளம் அப்போதைய துணை ஆணையர் பணியிட மறுதலுக்கு பிறகு பராமரிப்பின்றி மீண்டும் யானை கோயிலுக்குள் நிறுத்தப்பட்டது. இரண்டு பாகன்களையும் திடீரென கடுமையாக தாக்கியது. இதில் ஒரு பாகனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனைத்தொடர்ந்து யானையை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் பயிற்சி பெற்ற பாகன்களை நியமிக்க பரிந்துரைத்தனர். இதனைத்தொடர்ந்து டாப்சிலிப் பகுதியில் இருந்து நன்கு பயிற்சி பெற்று பாகன்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு வருடம் முடிந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் காளிதாஸ் என்ற உதவி பாகனை யானை தாக்கியது. இதில் அவர் பலியானார். இதையடுத்து 2020ம் ஆண்டு ஜூன் மாதம் யானை திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் உள்ள வனத்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் முகாமில் இருந்த உதவி பாகனையும் தாக்கியது. இதனைத்தொடர்ந்து யானை அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திருச்சி எம் ஆர் பாளையம் முகாமில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு யானை கொண்டு வரப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்த பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு யானை தெய்வானை கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 9 மாதங்களுக்கு பின் நேற்று மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு யானை கொண்டு வரப்பட்டது.

Related Stories: