போதை பொருள் பயன்படுத்தும் சிறார்களை விளம்பரப்படுத்துவது தவறு: திமுக எம்பி தயாநிதி மாறன் பேச்சு

புதுடெல்லி: போதை பொருள் பயன்படுத்தும் சிறார்களை விளம்பரப்படுத்துவது தவறு என்றும், அவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசுகையில், ‘போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் சிறார்களை குற்றவாளிகளாக பார்க்காமல், அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சரியான முடிவை எடுத்துள்ளது. அதற்கு எனது பாராட்டுகள். இந்த அவையில் உள்துறை அமைச்சர் உள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் போதை ெபாருள் கட்டுப்பாட்டு அமைப்பானது, உள்துறை அமைச்சகத்தின் கொள்கையில் இருந்து மாற்றுப் பாதையில் செல்வதாக தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் போதைப்பொருள் உட்கொண்டாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தாமல் கூட, சிறுசிறு சம்பவங்களில் கூட பரபரப்பை ஏற்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் சிறார்கள் கைது செய்யப்படுவதை விளம்பரம் செய்கிறது; இதன் மூலம் தவறான செய்தி மக்களை சென்றடைகிறது. போதைப் பொருள் பயன்படுத்துவோர் ெதாடர்பான புள்ளி விபரங்கள் மாநிலம் வாரியாக வழங்க முடியுமா?

அனைத்து மாநிலங்களிலும் போதைப் பொருள் பயன்படுத்துவோர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த முடியுமா? போதைப்பொருள் பயன்பாடு சம்பவங்களை மாநிலம் வாரியாக பார்த்தால், பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே உரிய புள்ளி விபரங்கள் கிடைத்தால் கல்வியின் மூலம் அவர்களுக்கு உதவிட முடியும்’ என்று பேசினார்.

Related Stories: