உடன்குடியில் பரபரப்பு; ரூ.6 லட்சம் மதிப்புள்ள 1100 கிலோ புகையிலை பறிமுதல்: அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது

உடன்குடி: உடன்குடியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். புகையிலை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லோடு ஆட்டோக்கள், 2 பைக்குகள் கைப்பற்றப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. எனவே பகல், இரவு நேரங்களில் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தி புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் உடன்குடி தேரியூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 பைக்குகள் மற்றும் 2 லோடு ஆட்டோக்களை மறித்து சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசவே அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் 2 லோடு ஆட்டோக்களை சோதனையிட்டதில் அதில் 1100 எடையுள்ள ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலையும், ரூ22 ஆயிரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் புகையிலை கடத்தலில் ஈடுபட்டது, நெல்லை மாவட்டம், பணகுடி, மாதாங்கோயிலைச் சேர்ந்த ராஜாகனி (44), அதே ஊர் கோயில்விளையைச் சேர்ந்த முருகன் மகன் லங்காமணி, முப்பிடாதி மகன் மணிகண்டன், லெப்பை குடியிருப்பைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஆல்பர்ட்ராஜன் மற்றும் உடன்குடி தேரியூரைச் சேர்ந்த முருகன் மகன்கள் சித்திரை செல்வன் (30), மோகன்ராஜ் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லோடு ஆட்டோக்கள், 2 பைக்குகளும் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் உடன்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More