களக்காடு அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்: பொதுமக்கள் பாதிப்பு

களக்காடு: களக்காடு அருகே தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். களக்காடு அருகே உள்ள ஜெஜெ நகர் கீழக்காலனி, மேலக்காலனி, பறையன்குளம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கழிவுநீர் வெளியேற வாறுகால்கள் சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஜெஜெ நகர், பறையன்குளம் கிராமங்களில் உள்ள தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வீடுகளுக்கு முன் முட்டளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளில் இருந்து வெளிவர முடியாமல் முடங்கி கிடக்க வேண்டியது உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் குடிநீர் குழாய்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடும் எழுந்துள்ளது. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மழைநீரில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடந்து செல்லும் போது தண்ணீருக்குள் தவறி விழுந்து விடும் அபாயமும் நீடிக்கிறது. மாணவ- மாணவிகள் மழைநீரில் இறங்கியே பள்ளிகளுக்கு சென்று வரும் அவலநிலை நிலவுகிறது.

இதுகுறித்து களக்காடு யூனியன் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாதமாகவே தெருக்களில் மழைநீர் வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளேன்” என்றார்.

Related Stories:

More