பாணாவரம் அருகே ஏரிக்கரை தார்சாலை சரிந்ததால் போக்குவரத்து துண்டிப்பு: நள்ளிரவில் கலெக்டர் ஆய்வு

பாணாவரம்:  பாணாவரம் அருகே ஏரிக்கரை தார்சாலை சரிந்ததால், போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ளது ஆயல் கிராமம். இந்த கிராமத்தின் ஏரி தற்போது நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இக்கரை மீது சோளிங்கர்-காவேரிப்பாக்கம் செல்லும் பிரதான தார்சாலை உள்ளது. இந்நிலையில் பாணாவரம் பகுதியில் நேற்றுமுன்தினம் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழை பாதிப்புகளை நேற்று முன்தினம் இரவு பார்வையிட வந்த சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமார், ஆயல் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே இருந்த தடுப்பு சுவர் உடைந்து, தார்சாலை சரிந்ததை கண்டார். உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் கலெக்டர் பாஸ்கரபாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு  வந்த கலெக்டர், சோளிங்கர்-காவேரிப்பாக்கம் சாலையில் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தி, அசம்பாவிதம் நடக்காதபடி பாதுகாப்பு அளிக்கும்படி காவல்துறை, நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டார். பின்னர், சூரை, மாங்குப்பம் வழியாக போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதனால், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம், பாணாவரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் சுற்றி சென்ல்கின்றனர்.  தடைசெய்யப்பட்ட பகுதியில், அரக்கோணம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் லிங்கேஸ்வரன், பாணாவரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்,  சாலை ஆய்வாளர் ஜானகிராமன், விஏஓ சதீஷ் ஆகியோர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: