வேலூர் தொரப்பாடியில் நிரம்பி வழியும் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது-அதிகாரிகள் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் தொரப்பாடி ஏரி நிரம்பியதால் அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் நீராதாரமாக சதுப்பேரி, ஓட்டேரி, பலவன்சாத்து, தொரப்பாடி, காட்பாடி கழிஞ்சூர் ஏரி போன்ற ஏரிகள் விளங்கி வருகிறது. இந்த ஏரிகள் மழைக்காலங்களில் நிரம்பி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததால் தொரப்பாடி ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி சித்தேரி ஏரி கடந்த வாரம் நிரம்பியது.

அந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் தொரப்பாடி ஏரி நேற்று நிரம்பியது. ஏரி நிரம்பியதால் அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் அப்பகுதியில் உள்ள ஜீவா நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் மற்றும் தெருக்கள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆக்கிரமிப்பு கட்டிடங்களால்தான் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

தொரப்பாடி ஏரி 2015ம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் நிரம்பி உள்ளது. ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய்களை பலர் போட்டி போட்டு ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளனர். இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் கால்வாய் 20 அடி அகலத்தில் இருந்து 3 அடியாக சுருங்கி உள்ளது. இதனால் தற்போது உபரி நீர் அனைத்தும் ஊருக்குள் புகுந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் வந்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

கொசு, பூச்சி, பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் வீட்டிற்குள் வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் அனைவரும் கடும் அச்சத்தில் உள்ளோம். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும்படி பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழக அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டருக்கு அறிக்கை

தொரப்பாடி ஏரியில் இருந்து வெளியேறும் கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது. இதனால் உபரிநீர் ஊருக்குள் புகுந்து வீடுகளில் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் வருவாய்த்துறையினர் ஏரி பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து கணக்கெடுத்து இன்று சர்வே செய்யும் பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து கணக்கெடுத்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படும் என்று தாசில்தார் செந்தில் தெரிவித்தார்.

Related Stories: